கீழ் மருவத்தூர் ஊராட்சியில் வரைபடம் மூலம் சுகாதார விழிப்புணர்வு

மதுராந்தகம்:  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் கீழ் மருவத்தூர் ஊராட்சி உள்ளது. இங்கு, கிராம வரைபடம் மூலமாக சுகாதாரப்பணிகள் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் வி.மாசிலாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் எஸ்.அபிராமி முன்னிலை வகித்தார். இதற்கு முன்னதாக, முழு சுகாதார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமுத்து, தங்கராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி கலந்துகொண்டனர். மேலும் இதில், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊராட்சியின் முழு வரைபடம் வரையப்பட்டிருந்தது. அதில், எந்தெந்த பகுதியில்  சாலைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பஜார் வீதிகள், பேருந்து நிறுத்தம், பள்ளிகள், அமைந்துள்ளன என்பது குறித்து எழுதப்பட்டிருந்து.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு எங்கெங்கு அதிக குப்பைகள் சேரும், எங்கெங்கு திடக்கழிவுகள் மற்றும் திரவ கழிவுகள் சேரக்கூடிய இடங்கள் இருக்கிறது என்பது குறித்து, வரைபடம் மூலமாக விளக்கமளிக்கப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார் பொதுமக்களிடம் கூறுகையில்,  ‘ஊராட்சிகள்தோறும் முழுமையான சுகாதாரத்தை நாம்  அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படும்போது, அதில் விடப்படும் கழிவு நீர் ஏதாகிலும் ஒரு குடியிருப்பின் முன்பாகவோ மக்கள் கூடும் இடத்திலோ தேங்கி நிற்கும் அல்லது நீர்நிலைகளான ஏரி, குளங்களிள் சென்று சேர்ந்து சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க, ஒவ்வொரு வீடுகளிலும் உறிஞ்சி குழாய்கள் அமைத்து, கழிவுநீர் வெளியேறாத வண்ணம் பார்த்துக் கொள்வது நம் அனைவருக்கும் நலமாக இருக்கும்’ என்றார்.

Related Stories: