மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வேலூர்: தொடர்புடைய மாநில அரசின் அனுமதியை பெறாமல் மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது என்று வேலூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். வேலூரில் நேற்று புதிய பஸ்நிலையத்தை திறந்து கோட்டை மைதானத்தில் நடந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் உரிமைகளை பெறுவதற்காகதான் எந்த சமரசத்திற்கும் இடம் அளிக்காமல், போராட கூடிய அரசாக திமுக அரசு இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் மேகதாது பிரச்னை. தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடியான பிரச்னை ஒன்று காவிரி பிரச்னை. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரில் முழு உரிமை உள்ளது. எனவே காவிரி நீரை பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும், வாதாடும் என்று உங்களுக்கு தெரியும். நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி இருக்கிறேன். அதன்படி தான் இப்போதும் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற ஒரு புதிய அணையை கட்ட திட்டமிட்டுள்ளது. அதனை தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து தடுத்து வருகிறோம். ஆனாலும் நேரம் கிடைக்கும்போது எல்லாம், பொழுதுபோகவில்லை என்றால் அதை பற்றி தொடங்கி விடுகின்றார்கள். அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்வது, சட்டம் போடுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்கு படையெடுப்பது என்று செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யும்போது எல்லாம் நாமும் அவற்றுக்கு தடுப்பணை போட்டு காரியங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடக அரசு அதிகமான அழுத்தத்தை காட்டியது. காவிரி ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். உடனடியாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என்று வலியுறுத்தி வற்புறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

இந்தநிலையில் கர்நாடக முதல்வர் டெல்லிக்கு சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். உடனடியாக நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து டெல்லிக்கு சென்றார். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து நம்முடைய பாதகங்களை வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்திற்கு பாதமாக எந்த செயலையும் செய்ய மாட்டடோம் என்று உறுதியை பெற்று வந்துள்ளது நமது குழு. காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில் மேகதாது பிரச்னையை விவாதிக்க மாட்டோம் என்று அந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

மேகதாது விவாதம் குறித்து தற்போது நீக்கி உள்ளார்கள். காவேரி விவகாரத்தில் 2018 பிப்ரவரி 16ம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி தொடர்புடைய மாநில அரசின் அனுமதியை பெறாமல் ஒன்றிய அரசு அணைய கட்ட முடியாது. கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது. எனவே கர்நாடக அரசுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல், தொழில்நுட்ப அனுமதியை ஒன்றிய அரசு தரக்கூடாது என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்க கடமைப்பட்டு உள்ளேன். இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசங்களுக்கும் இடம் இல்லாமல் போராட கூடிய, வாதாட கூடிய அரசு தான் திமுக அரசு. நிதி உரிமை வேண்டும். சமூகநீதி உரிமை வேண்டும். காவேரி உரிமை வேண்டும்.

கல்வி உரிமை வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன். ஏதோ ஒன்றிய அரசுக்கு எதிரான குரலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான குரல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் தீட்டக்கூடிய திட்டங்களாக இருந்தாலும் சரியாக  எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் வைக்கப்படும் கோரிக்கையாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதற்காக மட்டுமே. அப்படி தான் திமுக அரசு இயங்கி கொண்டு இருக்கிறது.

திராவிடர் இயக்கத்தின் அடிப்படை கொள்கை எல்லா மக்களும் எல்லாம் பெற வேண்டும் என்பது தான். மக்களுக்காக தான் எங்கள் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏழை எளிய நடுத்தர பொதுமக்களுக்காகவே வாழ்ந்து கொண்டு இன்றும் இருப்பர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் தான். இவர்கள் வாழ்க்கையே கொள்கை போராட்டம். மக்களுக்காக போராடு, மக்களுக்காக வாதாடு, மக்களுக்காக நல்லது செய் என்பதையே இவர்கள் 3 பேரும் இன்றும் உணர்த்தி கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நன்மைக்காகவே இத்தகைய விழாக்களை மாவட்டங்கள் தோறும் அரசு விழாக்களாக மட்டுமல்ல, மக்கள் விழாக்களாகவே நடத்திக் கொண்டு இருக்கிறோம். இப்போது அமைந்துள்ள ஆட்சி மக்களாட்சியாக தொடங்கி மக்களாட்சியாகவே தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: