வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக பைக் சக்கரங்களை புதைத்து சாலை போட்ட கான்ட்ராக்டர்: ஒப்பந்தத்தை ரத்து செய்ய மேயர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் பைக் சக்கரங்களை புதைத்து இரவோடு இரவாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கான்ட்ராக்டரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மேயர் சுஜாதா உத்தரவிட்டார். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் பேரி காளியம்மன் கோயில் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பைக்கை அகற்றிக்கொள்ளும்படி உரிமையாளர்களுக்கு சொல்லாமல், பைக்கின் இரு சக்கரங்களும் புதையும் வகையில் ஜல்லி கலந்த சிமென்ட் கலவையை கொட்டி பணியாளர்கள் சாலை அமைத்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை இதைப்பார்த்த பைக்கின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அப்பகுதியினர் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். தகவலறிந்த மாநகராட்சி மேயர் சுஜாதா உத்தரவின்பேரில், சிமென்ட் கலவையுடன் புதைத்திருந்த பைக் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பைக்குடன் சேர்த்து சாலை அமைத்த கான்ட்ராக்டரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மேயர் சுஜாதா அதிரடியாக உத்தரவிட்டார். இதுதொடர்பாக மேயர் கூறுகையில், ‘சிமென்ட் சாலை அமைக்கும்போது, அங்கிருந்த பைக்கை எடுக்கும்படி உரிமையாளருக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். மேலும் பைக்கை அருகில் இருக்கும் இடத்தில் தள்ளி நிறுத்தாமல் சக்கரங்கள் புதையும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறான விஷயம். இதனால் கான்ட்ராக்டரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: