சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்க இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு

சண்டிகர்: ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஹோட்டல் அறை வாடகைக்கு சரக்கு மாற்றும் சேவை வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி அமைப்பின் இரண்டு நாள் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமனையில் சண்டிகரில் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு பொருட்களின் வரி விகிதங்களை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரைகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஹோட்டல் அறை வாடகை உள்ளிட்ட சில சேவைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு அவற்றிற்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.  

நாளொன்றுக்கு ரூ.5,000-க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை அறைகளுக்கு 5 சதவிகிதம் சேவை வரி விதிக்கப்படவுள்ளது. அஞ்சல் அட்டை, உள்நாட்டு கடிதம், பதிவு அஞ்சல், 10 கிராமிற்கும் குறைவான கடித்த உரைகள் தவிர பிற அஞ்சலக சேவைகள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன.

காசோலைகள் தனித்தனியாகவோ அல்லது புத்தகமாக இருந்தாலோ 18 சதவிகித வரி விதிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தயிர், லஸ்ஸி, கோதுமை மாவு ஆகியவற்றின் மீது 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு, நிலக்கரி, எல்.ஈ.டி. விளக்குகள், அச்சு மை, வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றின் வரிவிகிதங்களை மாற்றியமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் ஆகியவற்றிக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்க இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் முறை இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் அத்தனையும் நீட்டிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

Related Stories: