பருவமழை மாற்றத்தால் குறைந்தது சோளம் மகசூல் வேதனையில் விவசாயிகள்

பேரையூர் : பேரையூர், சேடபட்டி, பகுதிகளில் சோளம் அறுவடையாகி வருகிறது. இப்பகுதியில் அதிகமான நிலங்கள் மானாவாரி விவசாய நிலங்களாகவே உள்ளன. கிணற்றுப் பாசனம், ஆழ்துளை கிணற்று பாசானம், இப்பகுதிகளில் குறைவாகவே உள்ளது. கடந்த முறை சோளம் பயிரிட்டதில் இப்பகுதி விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்தது. அப்போது சோளம் குவிண்டால் ரூ.2300க்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் வாங்கி சென்றனர்.

இப்போது பருவமழை மாற்றத்தால் உரிய நேரத்தில் சோளப்பயிர்கள் நடவு செய்ய முடியாமலும், உரிய காலத்தில் களை எடுக்காமல் விட்டதின் விளைவாக சோளப்பயிர்கள் கதிர்களை வைக்கும் பருவத்தில் அடர்த்தி இன்றி சோளக்கதிர்களும், பருவமழை மாற்றத்தினால் விளைந்த சோளக்கதிர்கள் கருப்பாக மாறி போதிய மகசூலை கொடுக்க வில்லை. இந்நிலையில் தற்போது தரம் பிரிக்கப்பட்ட நல்ல சோளம் குவிண்டால் ரூ.2700க்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் வாங்கி செல்கின்றனர்.

விலை ஏறி விற்கும் வேளையில் சோளம் குறைந்த மகசூலை கொடுத்திருப்பது இப்பகுதி விவசாயிகளிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்திபட்டி விவசாயி செல்வம் கூறுகையில், கடந்த முறை 4 ஏக்கரில் சோளம் பயிரிட்டு 40 மூட்டைகள் அறுவடை செய்தேன். இப்போதும் அதே 4 ஏக்கரில் சோளம் பயிரிட்டு 20 மூட்டைகள் மட்டுமே அறுவடை செய்துள்ளேன். பருவமழை மாற்றத்தினால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் இதுபோன்ற நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறினார்.

Related Stories: