திருவாரூர் நகரில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.5,000 அபராதம்-நகராட்சி அதிரடி

திருவாரூர் : திருவாரூர் நகரில் அரசின் உத்தரவை மீறி பாலிதீன் பொருட்களை விற்பனை செய்த வணிக நிறுவனத்திற்கு நகராட்சி மூலம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கேரி பேக் உள்ளிட்ட பாலிதீன் பொருட்களுக்கான தடை அமலில் இருந்து வருகிறது. மேலும் அரசு சார்பில் மஞ்சள் பையை கையில் எடுப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற வாசகத்துடன் பொதுமக்களிடம் மஞ்சள் பைகளை உபயோகிக்கும் முறைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் பாலிதீன் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனத்திடமிருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்வது மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் நகரில் நகராட்சி சார்பில் பாலிதீன் பொருட்கள் விற்பனை கடைகளில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.

நகராட்சி மேலாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் தங்கராம், தூய்மை பாரத திட்ட அலுவலர் ஜனனி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் நகரில் பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே வணிக நிறுவனம் ஒன்றில் அரசின் தடையை மீறி இதுபோன்று பாலிதீன் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு ரூ10 ஆயிரம் மதிப்பிலான அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடை உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories: