காவிரி கூட்டு குடிநீர் திட்ட விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் ராமநாதபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்பகுதிகள் பயனடைந்து வருகின்றன. தொடர்ந்து 2011-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சி, திருப்பத்தூர், இளையான்குடி, திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காளையார்கோவில் அருகில் உள்ள கிராமப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

 சிவகங்கை மாவட்டத்தில் மேலும் பல்வேறு பகுதிகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட கணக்கெடுப்பு செய்து திட்ட மதிப்பீடும் அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் பல ஆண்டுகளாக அடுத்தக்கட்ட பணிகள் எதுவும் தொடங்கப்பட வில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் அதிமுக ஆட்சி முடிவடையும் நேரத்தில் காவிரியில் புதிதாக சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசு அமைந்த பிறகு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி, திருப்பத்தூர், காளையார்கோவில் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் வழியாகவும் மற்றும் சிங்கம்புணரி, நாட்டரசன்கோட்டை, இளையான்குடி ஆகிய 3 பேரூராட்சிகளும் பயன்பெறும் வகையில் 200 கி.மீ அளவிற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் சிங்கம்புணரி, காளையார்மங்கலம், நாட்டரசன்கோட்டை, மறவமங்கலம் உட்பட 13 இடங்களில் நீர்த்தேக்க மையம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

மொத்தம் நான்கு கட்டப்பணிகளாக திட்டமிடப்பட்டு இரண்டாம் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை பகுதி கிராமத்தினர் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக பணிகள் மெதுவாக நடைபெறுவதால் மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்படுமோ என்ற அச்சம் உள்ளது.

குழாய் பதிக்கும் பணிகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடந்தன. பணிகளை விரைவு படுத்தி, குடிநீர் வழங்கி இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: