விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில், வேளாண்மைத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப்பயிற்சி, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த மண்டல அளவிலான கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி : வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் போடப்பட்டதால் கூடுதல் நிதிகள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஒரே ஆண்டில் 46 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, வேளாண்மைத்துறை சாதனை படைத்துள்ளது. பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் சவால்கள் உள்ளன. விவசாயப்பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்கள் விவசாய மதிப்புக்கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த முன்வர வேண்டும்.

வேளாண்மைத்துறை திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளை வேளாண் வணிகர்களாக, தொழிலதிபர்களாக மாற்ற வேண்டும்.பாரம்பரிய நெல் வகைகளை உற்பத்தி செய்ய முதலில் தைரியம் வேண்டும். இயற்கை வேளாண்மைக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. ரசாயன உரத்தை குறைத்து, இயற்கை உரத்தை பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை உரம் தயாரிக்க அரசு மானியம் வழங்கும். தமிழகத்தில் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வணிகவரி மற்றும்  பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: