அதிமுக ஆட்சியில் நடந்த 700 கோடி நிலமோசடி வழக்கு சர்வேயர், உதவியாளருக்கு ஜாமீன்: தஞ்சாவூரில் தங்கி கையெழுத்திட நிபந்தனை

மதுரை:  ரூ.700 கோடி நிலமோசடி வழக்கில் கைதான சர்வேயர், உதவியாளருக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் கிளை, தஞ்சாவூரில் தங்கியிருக்க வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது.  தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும், ஓபிஎஸ்சிற்கு மிக நெருக்கமானவருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் அன்னப்பிரகாஷ், அதிமுகவை சேர்ந்த முத்துவேல் பாண்டியன் மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் உட்பட அதிகாரிகள் பலர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சர்வேயர் சக்திவேல், இவரது உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், இருவருக்கும் ஜாமீன் வழங்கினார். இவர்கள் தஞ்சாவூரில் தங்கியிருந்து 30 நாட்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் தினசரி காலையில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளார்.

Related Stories: