பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாள் அனுமதி

மதுரை: ஆனி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நாளை முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

நாளை (ஜூன் 26) பிரதோஷம், 28ம் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி நாளை முதல் வரும் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நாளை பிரதோஷத்தையொட்டி, சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்வர்.

Related Stories: