திருப்பத்தூர் நகராட்சியில் பணிகள் முழுமையடையாமல் ₹108 கோடியில் அதிமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம்

* இணைப்புகள் இல்லாமல் சாலைகளில் ஓடும் கழிவுநீர்

* அதிகாரிகள் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகராட்சியில் பணிகள் முழுமையடையாமல் ₹108 கோடியில் அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இணைப்புகள் முழுமையாக இல்லாமல், சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்துள்ளது.   திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதாளசாக்கடை திட்டம் அதிமுக ஆட்சியின்போது, ₹108 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி இணைந்து செயல்படுத்தியது. இந்த பணிகள் முடிவடையாமலேயே அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக பாதாள சாக்கடை திட்டத்தை திறந்து வைத்தார்.

நகராட்சியில் 82 கிலோ மீட்டர் தூரம் திருப்பத்தூரை சுற்றி இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 21 கிலோமீட்டர் தூரம் பணிகள் முடிவடையாமல் உள்ளது. மேலும் 25 ஆயிரம் வீடுகளுக்கு பதிலாக தற்போது வரை 5,532 வீடுகளுக்கு மட்டும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தரமற்ற முறையில் இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகள் செய்யப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறி நகரம் முழுவதும் துர்நாற்றம் வீசி, பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த கழிவுநீரால் திருப்பத்தூர் ஆரிப் நகர், கவுதமபேட்டை, காயிதே மில்லத் நகர், கோட்டை தெரு, சந்திரன் நகர், வேல நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை தொட்டியின் மூடியில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் கழிவுநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பாதாள சாக்கடை திட்டம் முழுமையடையாமல் அதிமுக ஆட்சியின்போது அவசர கதியில் திறக்கப்பட்டதால், கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகளால் பாதித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கிறோம்.எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு பயன்படாத கழிவுநீர் உந்து நிலையங்களை செயல்பட வைத்து, மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

இதேபோல் சந்திரன் நகர், ஆரிப்நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கிறது. எனவே திறந்து வைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடியால் உயிரிழப்புகளை ஏற்படாதவாறு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரியிடம் கேட்டதற்கு, ‘பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடைந்துவிட்டது. தற்போது 5 ஆண்டுகாலம் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சரிவர பணிகள் மேற்கொண்டால் மட்டுமே அதனை சீர்செய்ய முடியும். இது குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நகராட்சியிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை. அதன் பின்னர் தான் நாங்கள் இதற்கான பணிகளை மேற்கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: