உ.பி.யில் தொட்டாலே சரிந்து விழும் செங்கல் சுவர்: யோகி அரசியலில் அடிமட்டம் வரை ஊழல் என அகிலேஷ் யாதவ் விமர்சனம்

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரியின் செங்கல் சுவரை சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெறும் கையால் தள்ளிவிடும் காணொளி வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள சிவ்ஷாத் கிராமத்தில் அரசு பொறியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு சென்ற சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.வர்மா, வெறும் கையால் தள்ளியபோதே அந்த செங்கல் சுவர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த காணொளியை பகிர்ந்து, பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல் தனித்துவமானது என்று

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.

யோகி அரசில் அடிமட்டம் வரை ஊழல் பரவி இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினரான ஆர்.கே.வர்மா, தான் திருமண நிகழ்ச்சிக்கு அந்த வழியாக செல்லும்போது அந்த கிராம மக்களின் புகாரை அடுத்து புதிய கட்டிடத்தை ஆய்வு செய்ததாக தெரிவித்தார். மோசமான கல்லூரி கட்டுமானம் குறித்து, சமூக வலைத்தளங்களில் உத்திரப்பிரதேச அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் பலர் இனிமேல் கட்டிடங்களை இடிக்க யோகி அரசுக்கு புல்டோசரே தேவையில்லை என்று கிண்டலடித்துள்ளனர்.       

Related Stories: