நீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்றில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் பழைய நீடாமங்கலம்- வையகளத்தூர் இடையே வெண்ணாற்றில் கட்டப்படும் பாலம் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் அடிக்கடி போடப்படும் ரயில்வே கேட்டால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அவ்வழியாக வெளி மாநிலம், மாவட்டம் மற்றும் அருகில் உள்ளவர்கள் நவகிரக கோயில்கள், சுற்றுலா தலங்களுக்கு நீடாமங்கலம் வழியாக செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனையறிந்த கடந்த அதிமுக ஆட்சியின்போது நீடாமங்கலம் ரயில்வே கேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழைய நீடாமங்கலத்திலிருந்து- வையகளத்தூருக்கு வெண்ணாற்றில் இணைப்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பாலம் கட்டும் பணி நிறைவடைந்தால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும். ஏனெனில் திருவாரூர், கும்பகோணம் பகுதியிலிருந்து வரும் பள்ளி வாகனங்கள், ஆட்டோ, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி போடப்படும் ரயில்வேகேட்டில் நெரிசலில் சிக்காமல் நெரிசலில் இந்த பாலம் வழியக செல்லும் என்ற நோக்கில் இந்த பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

ஆனால் பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து ஆற்றின் கீழ் பகுதியில் ஓரளவு பணிகள் நிறைவடைந்தது. பாலத்தின் மேல்பகுதி பணிகள் மட்டும் மந்தமாக நடை பெறுகிறது.இந்த பணிகளை விரைவில் முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: