மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சித்திரை வீதியில் மீண்டும் கழிப்பறை அமைக்கப்படும் : ஐகோர்ட் கிளையில் மாநகராட்சி தகவல்

மதுரை: மீனாட்சியம்மன் ேகாயில் பக்தர்களுக்காக சித்திரை வீதியில் மீண்டும் கழிப்பறை அமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த வக்கீல் மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கோயில் சுற்றுப்பகுதியில் கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதிகளில் மாநகராட்சி தரப்பில் நடமாடும் கழிப்பறைகள் இருந்தன. தற்போது இவை மூடப்பட்டுள்ளன.

கழிப்பறை இல்லாததால் பெண்கள், முதியோர், பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ராமேஸ்வரம், பழநி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் அறநிலையத்துறை தரப்பிலேயே கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவோருக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை. ஏற்கனவே இருந்த கழிப்பறைகள் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது அகற்றப்பட்டன. எனவே, சித்திரை வீதிகளில் போதுமான கழிப்பறை வசதியை செய்து தருமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, ‘‘மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்பகுதியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் பக்தர்கள் மட்டுமின்றி போலீஸ்காரர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமப்படுகின்றனர்’’ என்றார். கோயில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘தெற்கு மற்றும் கிழக்கு கோபுரம் பகுதியில் இரு கழிப்பறைகள் கோயில் தரப்பில் பராமரிக்கப்படுகிறது. இதற்கென 10 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.அப்போது மாநகராட்சி தரப்பில், ‘‘ஸ்மார்ட் சிட்டி பணிக்காக சித்திரை வீதியில் அகற்றப்பட்ட கழிப்பறையை மீண்டும் அதே இடத்தில் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி முடிய 2 மாதம் ஆகும். அதன்பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்’’ என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: