குதிரை, காரில் போவது பழைய ஸ்டைல் புல்டோசரில் நடந்த மணமகன் ஊர்வலம்: அடம் பிடித்து சாதித்த வாலிபர்

பீடல்: நாடு முழுவதும் சமீப காலமாக புல்டோசர் என்ற பெயர் அதிகளவில் அடிபடுகிறது. காரணம், பாஜ ஆளும் மாநிலங்களில் கலவரம், குற்றங்களில் ஈடுபடுவோரின் வீடுகள், கடைகள் போன்றவை உடனுக்கு உடனாக புல்டோசரில் இடித்து தள்ளப்படுகிறது. இது பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், ஒரு வாலிபர் தனது மாப்பிள்ளை ஊர்வலத்தை புல்டோசரில்தான் நடத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சாதித்தும் இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலம், பீடல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜல்லார் கிராமத்தை சேர்ந்தவர் அன்குஷ் ஜெய்ஷ்வால். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் திருமணத்திற்கான மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், தனக்கு குதிரை, காரில் ஊர்வலம் தேவையில்லை என்று மறுத்து விட்டார். அதற்கு மாறாக, புல்டோசரில் மாப்பிள்ளை ஊர்வலம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ‘நான் ஒரு சிவில் இன்ஜினியர். தினமும் கட்டுமான பணி தொடர்பான புல்டோசர் போன்ற இயந்திரங்களுடன் பணி செய்கிறேன். எனவே, எனது மாப்பிள்ளை அழைப்பை புல்டோசரில்தான் நடத்த வேண்டும்,’ என்று அவர் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து, புல்டோசர் கொண்டு வரப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதில், அமர்ந்தபடி மிகுந்த உற்சாகத்தோடு அன்குஷ் ஊர்வலமாக திருமண மண்டபத்தை அடைந்தார்.

Related Stories: