பிரிக்ஸ் மாநாட்டில் ஜின்பிங் ஆவேசம் பொருளாதார தடை பூமராங் போன்றது: அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை

பீஜிங்: பிரிக்ஸ் 14வது உச்சி மாநாடு சீனத் தலைநகர் பீஜிங்கில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நேற்று தொடங்கியது. உலக நாடுகள் இடையே பிரச்னை நீடிக்கும் நிலையில், காணொலி மூலம் 2 நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் நாள் கூட்டத்தில், உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்த சீனா, அதன் மீது பொருளாதாரத் தடைகள் விதித்த அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

சீனாவை உலகின் முதன்மை அதிகாரமிக்க நாடாக உருவாக்க ஜின்பிங் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே, தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், அத்துடன் இணைந்த தைவானை அச்சுறுத்துதல், ஹாங்காங் மீது உரிமை கொண்டாடுதல், கம்போடியா போன்ற நாடுகளின் ராணுவத்தை வலுப்படுத்த அதிகளவில் முதலீடு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பிரிக்ஸ் பொருளாதார மாநாட்டில் பேசிய ஜின்பிங், `உக்ரைன் மீதான போர் மனித சமுதாயத்துக்கான எச்சரிக்கை மணியாகும். ஆதிக்கம் செலுத்துதல், சர்வதேச அணிசார்ந்த அரசியல், நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்தல் மூலம் உலகில் அமைதி, நிலைத்தன்மையை உருவாக்கிட முடியாது. அது போர், பேரழிவுக்கே இட்டு செல்லும் என்பதை வரலாறு உணர்த்தி உள்ளது. ஒரு நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது பூமராங் போன்றது; இருமுனை கத்தி போன்றது. அது திரும்பவும் நம்மையே தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது (அமெரிக்காவை மறைமுகமாக குறிப்பிட்டு). இதனால் உலக நாடுகள் அவதிக்குள்ளாக நேரிடும். உலகின் பொருளாதாரம், நிதி ஆதாரங்களும் தடைபடும்,’ என்று கூறினார்.

* இந்தியா, ஆஸி.க்கு அச்சுறுத்தல்

அரசு முறைப் பயணமாக 4 நாட்கள் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் ரிச்சர்டு மார்லெஸ், ``இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பாதுகாப்பு கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பு கொண்டுள்ளன. எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் இந்தியா, ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு ஒரே மாதிரியாக உள்ளது. சீனாவே இந்தியா, ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வர்த்தக நட்பு நாடாக உள்ளது. அதே போல், இரு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது,’ என்று கூறினார்.

Related Stories: