குன்றத்தூர் நகராட்சியில் திடக்கழிவுகளில் தயாரிக்கப்பட்ட கலைநய பொருட்கள் விற்பனை

குன்றத்தூர்: குன்றத்தூர் நகராட்சியில் திடக்கழிவுகள் மூலம் தயாரிக்கப்பட்ட கலைநய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் தினமும் 8 முதல் 9 டன் குப்பை சேகரிக்கப்பட்டு இவற்றை நகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு வந்து, அவை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகின்றன. இதன்பிறகு மக்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம், டிகம்போஸ்ட் உரம் தயாரிக்கப்பட்டு ஒரு கிலோ ₹15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டயர் உள்ளிட்ட மக்காத குப்பை கழிவு மூலம் கலைநயமிக்க பொருட்கள் தயாரிக்கலாம் என நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதன்படி, மக்காத பழைய டயர்களில் இருந்து மான், முதலை, பாம்பு, அலங்கார விளக்குகள், பூந்தொட்டி போன்ற உருவங்களை நகராட்சி ஊழியர்கள் சிறப்பாக வடிவமைத்தனர். இதன்பிறகு அந்த பொருட்களுக்கு வர்ணம் பூசப்பட்டு குன்றத்தூர் முருகன் கோயில் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.  இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதால் அவற்றை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

Related Stories: