சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே சித்தலூர் மற்றும் முத்தலூர் பகுதியில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, தொல்நடைக் குழுவைச் சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்ததாவது: சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கிலிருந்து செல்லும் பிரிவு சாலையில் இரண்டு அம்மன் கோயில்கள் காணப்படுகின்றன.

 இக்கோயிலை ஒட்டி குவியலாகக் கிடைக்கும் கற்குவியலில் கல்லெழுத்து பொறிப்புடன் ஒரு கல் காணப்பட்டது. இக்கல்வெட்டை வேறொரு பகுதியில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தியுள்ளனர். இக்கல்லை நிலைக்கல்லின் மேல் பகுதியாக பயன்படுத்தியிருக்கலாம். இக்கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம்.

இதில் நாயனாருக்கு, கடமை, அந்தராயம் போன்ற வரி தொடர்பான சொற்களும், குறிச்சி குளம், இசைந்த ஊரோம் போன்ற சொற்களும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் குறிச்சி குளம் பகுதி இறைவனுக்கு தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. அருகிலுள்ள முத்தலூர் கண்மாயில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள் வெளிப்பரப்பில் அடுத்தடுத்து உள்ளன. அகன்ற வாய்களை கொண்ட தாழிகளும் அதன் அருகே புதைக்கப்பட்டுள்ள சிறுசிறு பானைகளையும் சிதைந்த நிலையில் அங்குமிங்குமாக 15க்கும் மேற்பட்ட தாழிகள் உள்ளன.

தாழிகள் நிறைந்துள்ள பகுதியில் 3,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களும் பரவலாக உள்ளன. முதுமக்கள் தாழிகள் கல்வட்ட எச்சங்கள் உள்ள இடம், தற்போது வரை இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் சிதைவுறாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Related Stories: