கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் வாலிபர் மீது தாக்குதல் 2 டிரைவர்கள் கைது-வீடியோ வெளியானதால் பரபரப்பு

கோவை : கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இந்த பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி தகராறு, மோதல் ஏற்படுகிறது.குறிப்பாக, இரவு நேரத்தில் சிலர் மது போதையில் திரண்டு கூட்டமாக சேர்ந்து தகராறு செய்வதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் அங்கு வந்த வாலிபர் ஒருவரை விரட்டி தாக்கினர்.

இந்த ஏரியாவுக்கு வரக்கூடாது, உன்னை விடமாட்டேன் எனக்கூறி அவர்கள் தாக்கினர். தாக்குதல் நடத்திய நபரில் ஒருவர் காக்கி சீருடை அணிந்திருந்தார். இந்த மோதலின் போது காட்டூர் போலீஸ்காரர் வந்து விசாரித்தார்.அப்போது, நாங்க டிரைவர்கள் எனக்கூறி அவர்கள் அடாவடியாக நடந்து கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் நடந்த தாக்குதல், தகராறு, ஆபாச பேச்சுகளை அங்கு இருந்த ஒருவர், வீடியோ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து அந்த பகுதியில் கடை நடத்தி வருபவர்கள் கூறுகையில்,‘‘ தினமும் இங்கு தகராறு நடக்கிறது. மது போதையில் டிரைவர்கள் சிலர் இங்கு சுற்றுகிறார்கள். பஸ் ஸ்டாண்ட் தங்களுக்கு சொந்தம் என்பது போல் இவர்கள் அடாவடியாக நடக்கிறது. இங்கு புறக்காவல் நிலையம் அமைத்து கோஷ்டி சேர்ந்து அடாவடி செய்யும் நபர்களை லத்தியால் அடித்து விரட்டவேண்டும்.

இவர்களால் பஸ் ஏற வரும் பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சிலரை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்’’ என்றனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் காட்டூர் எஸ்ஐ வெள்ளிராஜ் கோவையை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர்கள் அஜ்மல் (23), அருண் (27) ஆகியோரை கைது செய்தார்.

Related Stories: