பெரும்பான்மை இழந்தது மகாராஷ்டிர அரசு ஏக்நாத் ஷிண்டே கை ஓங்குகிறது: 34 சிவசேனா எம்எல்ஏக்கள், 7 சுயேச்சைகளுடன் அசாமில் முகாம்; பதவியை ராஜினாமா செய்ய தயார் என முதல்வர் உத்தவ் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் 41 பேருடன் சூரத்தில் இருந்து சென்று தற்போது அசாம் மாநிலம், கவுகாத்தியில் தங்கியுள்ளார். இதனால், சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா - பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதன்பிறகு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா தலைமையில் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி உருவானது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இந்த கூட்டணி ஆட்சிதான் மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.

இதன்பிறகு ஒன்றிய அரசுக்கும், சிவசேனா அரசுக்கும் கடும் மோதல் போக்கு காணப்பட்டு வருகிறது. இரண்டு கட்சிகளுக்குமான பலப்பரீட்சையாக, கடந்த 10ம் தேதி நடந்த மாநிலங்களவை தேர்தலும், கடந்த 20ம் தேதி நடந்த சட்ட மேலவை தேர்தலும் அமைந்தன. இரண்டிலுமே பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இது ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. காங்கிரஸ் உட்பட, 2019ல் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தந்த சிறு கட்சிகள், சுயேச்சைகள் கூட, மேற்கண்ட தேர்தல்களில் பாஜ வேட்பாளர்களுக்கு வாக்களித்தது ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரேவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கிறது.

கடந்த 20ம் தேதி சட்ட மேலவைக்கான வாக்குப்பதிவு முடிந்த கையோடு, சிவசேனா மூத்த தலைவரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் குஜராத்தில் உள்ள சூரத்துக்கு ரகசியமாக சென்று, அங்குள்ள நடசத்திர ஓட்டலில் அம்மாநில போலீஸ் பாதுகாப்புடன் தங்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து கொண்டு, பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும்படி முதல்வர் உத்தவ்  தாக்கரேவுக்கும் ஷிண்டே எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, சூரத்தில் இருந்த ஏக்நாத் ஷிண்டேயை, சிவசேனா மூத்த தலைவர்கள் நர்வேகர் மற்றும் ரவீந்திர பதக் ஆகியோர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தலின் பேரில் நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயன்றனர். அது தோல்வியில் முடிந்த நிலையில், சூரத்தில் இருந்து நேற்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ.க்கள் அனைவரும் 3 சொகுசு பஸ்களில் சென்றனர். அவர்கள் அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கு பாஜ ஆட்சி நடப்பதால், இவர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை தன்னுடன் வந்துள்ள எம்எல்ஏ.க்களுடன் புகைப்படத்தை ஷிண்டே வெளியிட்டார். அதில், 34 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இது தவிர, 7 சுயேச்சை எம்எல்ஏ.க்களும் தன்னுடன் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசேனா தலைவர்கள், நேற்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதில் பங்கேற்காதவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த ஷிண்டே, கட்சி கொறடாவாக எம்எல்ஏ பரத் கோகவாலே நியமிக்கப்பட்டு விட்டதால், கட்சி கொறடாவாக சுனில் பிரபு பிறப்பித்த இந்த உத்தரவு சட்டப்படி செல்லாது என தெரிவித்துள்ளார். எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஷிண்டேயுடன் தங்கியுள்ள உள்துறை இணையமைச்சர் சாம்புராஜ் தேசாய் உட்பட சில அமைச்சர்களுக்கும் எம்எல்ஏ.க்களுக்கும் சுனில் பிரபு வாட்ஸ்ஆப், குறுந்தகவல், இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

இதனிடையே, நேற்று, தனக்கு ஆதரவாக 46 எம்எல்ஏக்கள் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக மராத்தி டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘என்னிடம் போதுமான அளவுக்கு (கட்சித்தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு) சிவசேனா எம்எல்ஏக்கள் உள்ளனர்,’ என தெரிவித்துள்ளார். ஷிண்டேயின் இந்த கூற்றின்படி, மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. சிவசேனா கடந்த 2019ல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த பிறகு பெரும்பான்மையை நிரூபித்தபோது, கூட்டணி கட்சிகள், சுயேச்சைகள், சிறு கட்சிகள் உட்பட 169 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தது. மொத்தம் 288 பேர் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில், சிவசேனா எம்எல்ஏ ஒருவர் கடந்த மே மாதம் இறந்ததை தொடர்ந்து தற்போது 287 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு 144 தேவை.

பாஜவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜவிடம் மட்டும் 106 பேர் உள்ளனர். பாஜ ஆதரவு உதிரி கட்சிகள், சுயேச்சைகளையும் சேர்த்தால் 119 பேர் உள்ளனர். ஷிண்டேவும், பாஜவும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தற்போது அதிக ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளதால், மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. கவர்னருக்கு ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது. எம்எல்ஏக்கள் மாயமானதை தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பதற்றமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஷிண்டேவுக்கு சவால் விடும் வகையில், பேஸ்புக் வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘‘முதல்வர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்ய தயார். எனக்கு அடுத்ததாக முதல்வர் பதவியில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் அமர்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். சிவசேனா தலைவர் பதவியில் இருந்தும் விலக தயாராக இருக்கிறேன். கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் யாராவது நேரில் வந்து என்னிடம் கேட்டால், ராஜினாமா கடிதத்தை தர தயாராக இருக்கிறேன். இது ஒன்றும் நாடகமல்ல. கடிதத்தை தயாராகவே வைத்துள்ளேன்’’  என பேசியுள்ளார்.

* ஷிண்டேயுடன் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் குளறுபடி?

ஏக்நாத் ஷிண்டேயுடன் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் மாறுபட்ட தகவல்கள் வந்தன. அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் 11 பேர் உள்ளதாக முதலில் கூறப்பட்டது. இது பின்னர் 14 ஆகவும், 22 ஆகவும் உயர்ந்தது. பின்னர் சுயேச்சைகளுடன் சேர்த்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 46 என கூறப்பட்டது. ஆனால், எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கவர்னருக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவியது. அதில் 34 பேர் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர். எனவே, 34 பேர் இருப்பது மட்டுமே சரியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

* ‘சட்டப்பேரவை கலைக்கப்படலாம்’சஞ்சய் ராவுத் கருத்து

மராத்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏக்நாத் ஷிண்டே, தன்னுடன் 46 எம்.எல்.ஏ. இருப்பதாக தெரிவித்தார். தங்களிடம் போதிய எண்ணிக்கையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘மகாராஷ்டிர அரசியலில் நகர்வுகளை கவனிக்கும் போது, சட்டப்பேரவை கலைக்கப்படலாம் என்று தோன்றுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: