இரட்டை தலைமையால் பல்வேறு சிக்கல்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைவராக தேர்வு செய்ய வேண்டும்: நீலகிரி மாவட்ட அதிமுக தீர்மானம்

ஊட்டி: இரட்டை தலைமையால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆகையால் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக தேர்வு செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட அதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையா? அல்லது இரட்டை தலைமையா? என்ற உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், சிலர் பன்னீர்செல்வதற்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த குழப்பத்திற்கிடையே நாளை (23ம் தேதி) சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு யாருக்கு ஆதரவு என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்பியும், அமைப்பு செயலாளருளான அர்சுணன், கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் தமிழக அதிமுகவில் இரட்டை தலைமையால் பல்வேறு சிக்கல்கள் உருவாகி உள்ளன. எனவே ஒற்றை தலைமை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகள் தமிழகத்தில் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: