ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ... ரிக்டர் அளவுக்கோளில் 6.1 ஆக பதிவு.. 250 பேர் பலி!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் நிர்வாகத்தின் இயற்கை பேரிடர் அமைச்சகத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100 பேர் இறந்த நிலையில், 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோஸ்ட், நங்கர்ஹார் மாகாணங்களிலும் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: