முன்விரோதத்தில் வீட்டிற்கு தீ வைத்ததாக புகாரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூர் அருகே முன்விரோதத்தில் வீட்டிற்கு கிராம மக்கள் தீ வைத்ததாக பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனை கண்டித்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது:சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம்  சென்னகான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாதமுனி. இவர் வேண்டுமென்றே எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் மீது அடிக்கடி ஏதாவது ஒரு புகாரை காவல் நிலையத்திலும் மண்டல அலுவலகத்திலும், கிராமம் வருவாய் துறை அலுவலகத்தில் கொடுத்து வருகிறார்.  மேலும் நாதமுனியுடன் கிராம மக்கள் யாரும் எந்த ஒரு தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. இதனால் நாதமுனி முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் உதவி தொகையை அதிகாரிகளுக்கு தெரிவித்து வழங்காமல் நிறுத்தி வைக்கிறார்.

அதேபோல் ஜாதி சான்றிதழ், இலவச வீட்டு மனை பட்டா, அரசிடமிருந்து வரும் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் அதிகாரிகளுக்கு சொல்லி தடங்கள் ஏற்படுத்தி வந்தார். இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம். அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டுக்கு அவரே தீவைத்துக் கொண்டு பின்னர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் சேர்ந்து எங்கள் வீட்டிற்குத் தீவைத்து விட்டனர் என  புகார் தெரிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு வந்து உரிய விசாரணை நடத்தி, எங்கள் மீது தொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதேபோல் நாதமுனி என்பவர் மீது மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை உடனடியாக கலெக்டர் ஏற்க வேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: