திருத்தணி அருகே காஸ் வெடித்து தீ விபத்து குடிசை எரிந்து நாசம்: வாலிபர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அருகே குடிசை வீட்டில் காஸ் வெடித்து சிதறியதில் வாலிபர் படுகாயமடைந்தார். திருத்தணி அடுத்த சிவாடா கிராமத்தை சேர்ந்தவர் பழனி(44). விவசாயக்கூலி, நேற்று வழக்கம்போல் விவசாய பணிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அவரது குடிசை வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால், 40 அடி உயரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ்(19), ஒடிவந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது லேசாக கழுத்துப்பகுதியில் அவருக்கு  தீக்காயம் ஏற்பட்டது.  

தகவலறிந்து அரக்கோணம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடும் போராட்டத்திற்குப்பின் தீ அணைத்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த துணிகள், மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, எல்.இ,டி டிவி ஆகியவை கருகியது. அதன் மொத்த மதிப்பு ₹5 லட்சம்.  தகவலறிந்த திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, பூனிமாங்காடு வருவாய் ஆய்வாளர் முகமது யாசர், கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், நெமிலி கிராம நிர்வாக அலுவலர் சந்துரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் உடனடி நிவாரணமாக ₹5 ஆயிரம் மற்றும் அரிசி, காய்கறி, பருப்பு, ஆடைகளை வழங்கினர்.புகாரின்பேரில் திருவலாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: