துபாயில் ஜுன்னா சர்புதீன் எழுதிய இராம காவியம் நூல் வெளியீடு

துபாய்: தமிழ்நாட்டைச் சார்ந்த இணையவெளியில் புத்தகங்களை விற்பனை செய்யும் Galaxy Book Sellers & Publishers (www.galaxybs.com) என்ற நிறுவனத்தின் தொடக்கவிழாவும், Galaxy Book நிறுவனத்தின் முதல் வெளியீடாக இலங்கையைச் சார்ந்த தமிழ் ஆளுமை “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் எழுதிய “மைவண்ணன் இராமகாவியம்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வும், குழுமத்தைச் சார்ந்த தொழில் அதிபர் திருமதி ஜெஸிலா பானு எழுதிய “வேற்று திசை” சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக் கூட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றன.

Galaxy Book Sellers & Publishers நிறுவனத்தின் தொடக்க நிகழ்வாக, நிறுவனத்தின் வணிக இணையத்தளத்தை (www.galaxybs.com) திருமதி. தேவதர்ஷினி பாலாஜி தொடங்கி வைத்தார். Galaxy நிறுவனம் குறித்த அறிமுக உரையையும், நிறுவனத்தின் வணிக நோக்கத்தையும் குறித்து திருமதி. ஜெஸிலா பானு நிகழ்த்தினார்.

அடுத்த நிகழ்வாக ’காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் “மைவண்ணன் இராம காவியம்” என்ற காவியத்தை அமீரக திமுகவின் தலைவர் திரு. எஸ்.எஸ். மீரான் வெளியிட தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமான திரு. கல்லிடைக்குறிச்சி முகம்மது மொய்தீன் அவர்கள் பெற்று கொண்டார். நூல் குறித்தும், நூலாசிரியர் குறித்தும் எழுத்தாளர் திரு. ஆசிப்மீரான் திறனாய்வு நோக்கில் விரிவாக உரையாற்றினார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் திரு. ஹமீது யாசீன், தொழில் அதிபர்கள் திரு. ரமேஷ் ராமகிருஷ்ணன், திரு. முகமது இக்பால், பிலால் அலியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு Galaxy Book நிறுவனத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி் மரியாதை செய்யப்பட்டது. இறுதி நிகழ்வாக வேற்றுதிசை சிறுகதை தொகுப்பின் விமர்சனக் கூட்டம் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் சார்பில் விரிவாக திறனாய்வு செய்யப்பட்டது. நூலின் ஆசிரியர் ஜெஸிலா பானு விமர்சன கூட்ட ஏற்புரை நிகழ்த்தினார்.

முப்பெரும் விழா நிகழ்வை வானொலி அறிவிப்பாளர் RJ அஞ்சனா அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக எழுத்தாளர் குழுமத்தின் சார்பில் ஆசிப்மீரான், ஜெஸிலா பானு, பிலால் அலியார், ஃபிர்தவ்ஸ் பாசா, கவுசர், புகைப்பட கலைஞர் சுப்ஹான், FJ Tours ரியாஸ் போன்றோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Related Stories: