தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை எதிரொலி: வேதாந்தா நிறுவன பங்கு விலை 11.5 சதவீதம் சரிவு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனைக்கு விடுத்துள்ளதை அடுத்து வேதாந்தா நிறுவன பங்கு விலை 11.5 சதவீதம் சரிந்துள்ளது. அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா தொழில் குழுமத்துக்குச் சொந்தமானது தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம். வெள்ளிக்கிழமை ரூ.263.65 ஆக இருந்த வேதாந்தா நிறுவன பங்கு விலை தற்போது ரூ.30.30 குறைந்து விற்பனையாகி வருகிறது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகக் கூறி தூத்துக்குடி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கோரி கடந்த 2020ம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

இதையடுத்து, அரசு சீல் வைத்ததால் ஆண்டு கணக்கில் மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை விற்றுவிட வேதாந்தா குழுமம் முடிவு செய்தது. இதற்காக ஸ்டெர்லைட் தொழிற்சாலையை வாங்க விரும்புபவர்களிடம் இருந்து வேதாந்தா நிறுவனம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேதாந்தா நிறுவன பங்கு விலை 11.5 சதவீதம் சரிந்துள்ளது.

Related Stories: