கோவையில் தினகரன் கல்வி கண்காட்சி துவங்கியது மாணவர்களுக்கு இன்றும் காத்திருக்கிறது பரிசு மழை

கோவை: கோவை தினகரன் நாளிதழ் சார்பில், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கல்வி கண்காட்சி-2022 பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கியது. மாணவர்கள் அளித்துவரும் பெரும் ஆதரவை தொடர்ந்து, 9-வது ஆண்டாக இக்கண்காட்சி நடந்து வருகிறது. இதனை, கோவை கிருஷ்ணா கல்வி குழுமங்கள் மற்றும் ஆச்சார்யா பெங்களூரு பி-ஸ்கூல் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. இதன் மீடியா பார்ட்னர்களாக தமிழ்முரசு மாலை நாளிதழ், குங்குமம், குங்குமம் டாக்டர் ஆகிய இதழ்கள் மற்றும் கோவை சூரியன் எப்.எம் நிறுவனம் ஆகியவை உள்ளன.

இந்த மாபெரும் கல்வி கண்காட்சியில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரபல கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள், கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மேலும், கண்காட்சியில் வெளிநாட்டு பிரதிநிதி கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது கூடுதல் சிறப்பு ஆகும். மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது தொடர்பான விவரங்களை தெரிவிக்க பாரத ஸ்டேட் வங்கியும் அரங்கம் அமைத்துள்ளன. கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அமைத்துள்ள அரங்கத்தில் ஸ்டேஷனரி மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கண்காட்சியில், 50-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக சிறந்த கல்வியாளர்களின் ஆலோசனைகள், பட்டப்படிப்பிற்கு பிறகு, மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிமுறைகள், கல்விக்கடன் பெற தேவையான ஆலோசனைகள் இங்கு வழங்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு முழுமையான கண்காட்சியாக இது அமைந்துள்ளது. இக்கண்காட்சியின் துவக்க விழா நேற்று நடந்தது.  கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கிவைத்தார்.

தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல் பேராசிரியர் சி.ராஜேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். கண்காட்சியில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகள், பாலிடெக்னிக் படிப்புகள் உள்பட பல்வேறு படிப்புகளை எங்கு படித்தால் நன்றாக இருக்கும்? குறிப்பிட்ட படிப்புகளை தேர்வு செய்வதால் என்ன பலன்? அவ்வாறு தேர்ந்தெடுக்கும் படிப்புகளை இந்தியாவில் படிக்கலாமா? அல்லது வெளிநாடுகளில் படிக்கலாமா? என்பன போன்ற மாணவமாணவிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஒவ்வொரு அரங்கிலும் இருக்கும் கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.

 மேலும், ஒவ்வொரு படிப்பிலும் சேருவதற்கு பிளஸ் 2வில் என்ன பாடத்தை படித்திருக்க வேண்டும் என்றும், தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினர். பிரபல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அரங்குகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை எளிதில் நிவர்த்தி செய்துகொள்ள ஏதுவாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மேலும், மாணவர்கள் வங்கி கடன் பெறுவது தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றனர். இக்கண்காட்சியை பார்வையிட மாணவ-மாணவிகள் பெருமளவில் குவிந்தனர்.

பல மாணவ-மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்திருந்தனர். இக்கண்காட்சியை காண வந்த அனைவருக்கும் ‘’கல்வி ஆலோசனை’’ புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன. இக்கண்காட்சியில், உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ‘’புட் கோர்ட்’’ தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சிக்கு வந்த மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில், மணிக்கு ஒரு முறை விலைஉயர்ந்த கல்லூரி பேக், தவா, பிளாஸ்க், குக்கர் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டது. இன்றும் இக்கண்காட்சி நடக்கிறது. இன்றும் மாணவர்களுக்கு பரிசு மழை காத்திருக்கிறது. மாலை 6 மணிக்கு கண்காட்சி நிறைவுபெறுகிறது. அனுமதி இலவசம்.

Related Stories: