தொடர் பதற்றம் எதிரொலி; சென்னையில் இருந்து பீகார், உத்திரப்பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்திரப்பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும், குறுகிய மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறுகியகால அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் ஓய்வுபெறும் வயது வரையிலும் பணிபுரிய முடியும். குறுகியகால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தனது பணிக்கால முடிவில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம். இந்திய ராணுவத்தில் தற்போது வரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14ம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான `அக்னிபாத்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசின் இந்தத் திட்டத்தை ஆதரித்தும் விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு இந்த திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட 8 மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். பீகாரின் சாப்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்கு இளைஞர்கள் சிலர் தீ வைத்தனர். மேலும் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் டயர் உள்ளிட்டவற்றை எரித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். தொடர்ந்து பீகாரின் பல இடங்களில் பதற்றமான நிலை நீடித்து வருகின்றது.

இதேபோல ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போராட்டங்களும் வன்முறையும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தெற்கு ரயில்வே அதிகார வரம்பிலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர் வன்முறை நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: