உரிய அனுமதி, அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை: கலெக்டர் அமிர்த ஜோதி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழும், மாநில அரசின் சமூக நலன் மற்றம் சத்துணவு திட்டத்துறையின் கீழும், சமூகப் பாதுகாப்புத்துறை வழிகாட்டுதலின் படியும் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காகவும், சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட்டதாக கருதப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது.

இந்த அலகின் மூலம் குழந்தைகள் இல்லங்களை பதிவு செய்து, இளைஞர் நீதிச்சட்டம் 2015ன் கீழ் முறைப்படுத்துதல், குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்தல், இல்லங்களில்  மேலாண்மை குழு கூட்டம் நடத்துவதை உறுதி செய்தல், இல்ல சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை கண்காணித்தல் போன்ற நிறுவனம் சார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டம் 2015-ன் கீழ் பதிவு பெறாமல் எந்தவொரு உரிய அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு குழந்தைகள் பெயரில் நன்கொடை வசூலிக்கும் தனிநபர்கள், இல்லங்கள் மற்றும் டிரஸ்ட் போன்ற அமைப்புகளின் மீதும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தாங்கள் நன்கொடை வழங்கும் இல்லங்கள்/டிரஸ்ட் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னர் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பொருள் தொடர்பாக தகவல்களை பெற/ தெரிவிக்க விரும்புவோர்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரியநாராயண சாலை, ராயபுரம், சென்னை-13. என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் dcpschennai2@gmail.com என்ற மின்னஞ்சலிலும், 9940631098/044-25952450. குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098லும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: