மதுராந்தகம் ஒன்றியத்தில் காலியாக உள்ள மேல்நிலை தொட்டி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்களில் காலியாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் பணியிடங்களை மக்கள் நலன் கருதி உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலை நீர்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். தற்போது, 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஊராட்சிகளில், வயது முதிர்வு காரணமாகவும், ஓய்வு பெற்றவர்கள், பணியில் இருக்கும்போதே இறந்தவர்கள் என பல்வேறு காரணங்களால்  ஏற்பட்ட காலி பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், காலியாக உள்ள அந்த பகுதியில் வேறொரு பகுதியில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மூலமாக தற்போது குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.  

இரண்டு பகுதிகளிலும் ஒருவரே குடிநீர் வினியோகம் செய்யும் சூழ்நிலை ஏற்படுவதால், தங்களுக்கு குடிநீர் கிடைக்க காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வினியோகம் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற வேண்டும். பொது மக்களுக்கு தண்ணீர் காலை நேரத்தில் சீராக கிடைக்க வேண்டுமென்றால், இந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்  ராகுல்நாத்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டப்போது,  இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ளது. நாங்கள் பலமுறை முயற்சி எடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அரசு உயர் அதிகாரிகள் மக்கள் நலன் கருதி அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கூறினார்.

Related Stories: