கண்டலேறு அணையில் இருந்து வரும் நீர்வரத்தால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளில் 7.82 டிஎம்சி நீர் இருப்பு

* செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் 90 சதவீதம் நீர் இருப்பு

* அடுத்த 5 மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது

சென்னை: கண்டலேறு அணை நீர்வரத்தால் 5 ஏரிகளின் நீர் மட்டம் 7.82 டிஎம்சியாக உள்ளது. இதில், புழல், சோழவரம் ஏரிகளில் 90 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. எனவே, சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு அடுத்த 5 மாதங்களுக்கு பிரச்னை இருக்காது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம், கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் ஆகிய 5 ஏரிகள் விளங்குகிறது. 11.50 டிஎம்்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் இருந்து தான் சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மூலம் தண்ணீரும், மேலும், தெலுங்கு கங்கை திட்டம் மூலம், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது.இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 9ம் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது வரை 1.88 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 5 ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 924 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 595 கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 131 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3058 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 180 கன அடி நீர் வந்து கொணடிருக்கிறது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3276 மில்லியன் கன அடி நீர் இருப்புஉள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 460 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 431 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.இந்த 5 ஏரிகளில் மொத்தம் 7824 மில்லியன் கன அடி அதாவது 7.82 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து ெதாடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஏரிகளின் நீர் இருப்பு மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போது, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 90 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தற்போதைய நிலையில், 5 ஏரிகளில் 7.8 டிஎம்சி உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை வரை சென்னை மாநகருக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படாது. அதாவது அடுத்த 5 மாதங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதாக இருக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: