அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், யுஏஇயின் ஐ2யூ2 முதல் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது: மோடி, பைடன் பங்கேற்பு

வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், யுஏஇ நாடுகளின் முதல் ஐ2யூ2 உச்சி மாநாடு அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது.உலக நாடுகளுடனான தனது கூட்டணியை மீண்டும் வலுப்படுத்த அமெரிக்கா முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுடன் இணைந்து குவாட் அமைப்பு, இந்தியாவுடன் இணைந்து வெளியுறவு, பாதுகாப்பு துறைகளுக்கான 2+2 என்பன உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் அமெரிக்கா உறுப்பு நாடாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதிய ஐ2யூ2 (ஐ2 என்றால் இந்தியா, இஸ்ரேல், யூ2 என்றால் யு.எஸ், யுஏஇ) குழு உருவாக்கப்பட்டுள்ளது.  இதன், முதல் உச்சி மாநாட்டை அடுத்த மாதம் 13ம் தேதி காணொலி மூலம் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் பைடன், பிரதமர் நெப்தலாஇ பென்னட், அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில் உணவுப் பற்றாக்குறை நெருக்கடி மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர, உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: