கவர்னரை 3 முறை நேரில் வலியுறுத்தியும் ஒப்புதல் தரவில்லை; சட்ட மசோதாக்களுக்கு விரைவில் நல்ல முடிவு வரும்: வேலூர் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ேவலூர்:  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 21ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதற்கான முன்னேற்பாடு குறித்து எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் ேவலூர் அடுத்த அரியூரில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்பி கதிர்ஆனந்த், எஸ்பி ராஜேஷ்கண்ணன், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலுவிஜயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி வரவேற்றார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தமிழக அளவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பெரிய மாநாடு ஜூலை 2ம் தேதி நாமக்கல்லில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கலைஞர் ஆட்சி காலத்தில் நிதிநிலை ரூ. 1.50 லட்சம் கோடி கடனில் இருந்தது. அதன்பின்னர் வந்த அதிமுக அரசு 10 ஆண்டுகளில் ரூ. 7 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். இந்த கடன் சுமையுடன் ஆட்சி பீடத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார்.

 நிதி கஷ்டத்தை மக்களிடத்தில் கூற முடியாது. நிதியை சமாளிப்பது எப்படி என்று கருணாநிதியின் மகனுக்கு தெரியும். தற்போதும் வெள்ள நிவாரண நிதி வழங்கி கொண்டிருக்கிறோம். ஆட்சியில் நிதிநிலையில் சரியாக நடத்திக் கொண்டிருப்பவர் மு.க.ஸ்டாலின். திமுகவிற்கு உயிரோட்டம் கொடுத்தது வேலூர் மாவட்டம் தான். நிதி ஆதாரம் இருந்தால் 95 சதவீத மனுக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்க முடியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின்போது வழிநெடுகிலும் நின்று அவரை பிரமாண்டமாக வரவேற்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் கொடி பேனர்கள் தோரணங்கள் கட்டக்கூடாது.

மலர்களை தூவி கோஷத்துடன் வரவேற்க வேண்டும். சித்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு விவகாரம் மற்றும் கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்ளிட்டவை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியிருந்தோம். இதுதொடர்பாக 3 முறை அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இருப்பினும் ஒப்புதல் தரப்படவில்லை. சூசகமாக சொல்கிறேன், விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு தலைவர்கள் அமுதா ஞானசேகரன், வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: