பெரியூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும்: மக்கள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் பெரியூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் மிகப் பழமையான மலை கிராமம் வெள்ள கெவி. இந்த கிராமத்தை அடுத்துள்ள மலை கிராமங்கள் சின்னூர், மற்றும் பெரியூர். இந்த மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியின் உட்பகுதியில் இந்த மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு நடந்து சென்றுதான் பெற முடியும்.

மிக நீண்டகாலமாக பெரியூர் மலை கிராமத்திற்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் பல்வேறுவிதமான போராட்டங்களை செய்துள்ளனர். அரசு துறைகள் அனைத்திலும் மனு செய்து உள்ளனர். தற்போது வெள்ள கெவி மலை கிராமத்திற்கு மண் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று பெரியூர் மலை கிராமத்திற்கும் சாலை அமைத்து தர வேண்டும் என்று நேற்று கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலகத்திற்கு இப்பகுதி மக்கள் மனு அளிக்க வந்தனர்.

தங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தர தடையில்லா சான்று வனத்துறையினர் உடனடியாக வழங்க வேண்டும் என்று பெரியூர் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். தடையில்லா சான்று கோரி பல மணி நேரம் வன அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். போலீசார், வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: