பூண்டி ஒன்றியத்தில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகும், தொழிலாளர் துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்து உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பூண்டி ஒன்றியத்தில் உள்ள மொன்னவேடு கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தலின் அவசியம், பள்ளி படிப்பை சிறார்களுக்கு உறுதி செய்தல், இடைநிற்றலை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர் முறையில் ஏற்படும் தனிநபர், குடும்பம் மற்றும் சமுதாய பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஐ.ஆர்.சி.டி.எஸ் சிறுவர் குழுவை சார்ந்த மணிமேகலை குழந்தைகளின் நான்கு முக்கிய உரிமைகளை விளக்கமாக எடுத்து கூறினார்.

இதில் மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் துரைராஜ் தலைமை வகித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, `குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்கு பெற்றோர்களும், சமுதாயமும், ஊராட்சிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி கற்க வேண்டிய பருவத்தில் வருவாய் ஈட்டுவதற்கு குழந்தைகளை ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்றார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் சங்கீதா, சமூக பணியாளர்கள் செந்தில், கனிமொழி, ஆற்றுபடுத்துனர் ஜான்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: