ஒன்றிய அரசின் சட்டப்படி கியூபிக் மீட்டர் அளவில் தான் கனிமவள பொருட்கள் விற்பனை; ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை:  திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு மணலை யூனிட் அடிப்படையில் விற்பனை செய்வதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தர நிர்ணய அளவீட்டு முறையில் மணல் விற்பனையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘மணல், கிரானைட் உள்ளிட்ட கனிம பொருட்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் சட்டப்படி கியூபிக் மீட்டர் என்ற அளவில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு யூனிட் என்பது 2.83 கியூபிக் மீட்டராகும்.

விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறது’’ என வாதிட்டனர். இதையடுத்து இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுதாரரின் கோரிக்கையில் போதிய முகாந்திரம் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: