சிறையில் பக்திப்பாடல் பாடியவர் வீர் சாவர்கர்; மகாராஷ்டிராவில் மோடி பேச்சு

மும்பை: ‘‘இந்துத்துவ சித்தாந்தவாதியான  வீர்சாவர்கர் ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, துக்காராம்  வர்கரியின் பக்தி பாடல்களை பாடியுள்ளார்’’ என மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேசி உள்ளார். மகாராஷ்டிராவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி புனே மற்றும் மும்பைக்கு நேற்று வருகை தந்தார். விமானம் மூலம் புனேயில் வந்திறங்கிய அவரை, துணை முதல்வர் அஜித்பவார், பாஜ எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பெட்நவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் நேற்று மதியம் 1.45 மணியளவில் புனே தெகுவில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜ் கோயிலை திறந்து வைத்தார். துக்காராம் சாமியார் புனேயில் இருக்கும் தெகு என்ற இடத்தில் வாழ்ந்தவர். கவிஞரான இவர் துக்காராம் வர்கரி இறந்த பின்னர் அவர் வாழ்ந்த பகுதியில் ஷீலா (பாறை) கோயில் கட்டப்பட்டது. முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கோயிலை பிரதமர் நேற்று திறந்து வைத்தார். அதில் பேசிய அவர், ‘‘பக்தி மார்க்கத்தை பரப்ப துக்காராம் பெரும் பங்காற்றினார். அவர் பல பக்தி பாடல்களை எழுதியும் பாடியும் உள்ளார்.

அவை பதாங் என்று அழைக்கப்படுகின்றன. இந்துத்துவ சித்தாந்தவாதியான வீர்சாவர்கர் ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, துக்காராம் வர்கரியின் பக்தி பாடல்களை பாடியுள்ளார். அவர் தனது கைவிலங்குகளை இசைக்கருவிகளாக பயன்படுத்தி துக்காராம் வர்கரியின் பக்தி பாடல்களை பாடுவார், என்றார்.   பின்னர் மாலை 4.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தங்குவதற்கான புதிய ஜல்பூஷன் கட்டிடத்தையும், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.

Related Stories: