சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சி ஆலோசனை கூட்டம் ஆந்திர மாநிலம் ₹7.50 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது

* 3 ஆண்டில் 156 விவசாயிகள் தற்கொலை

* முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

சித்தூர் : சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் அமர்நாத் விவசாயிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அமர்நாத் பேசியதாவது:

மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு துரோகங்கள் மற்றும் மோசடிகள் செய்து வருகிறார். அவரது ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. இந்தாண்டு டெல்டா விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய இதுவரை தண்ணீர் திறக்கவில்லை.

இதனால், டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதுவரை டெல்டா விவசாயிகளுக்கு அந்தந்த பகுதியிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. முதல்வர் ஆனவுடன் நான் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் ஏற்படாதவாறு விவசாய தானியங்களை அரசே அதிக விலைக்கு பெற்றுக் கொள்ளும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அவரது ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட நெல் ஒரு குவிண்டாலுக்கு ₹530 குறைவாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விவசாயிகள் பயிரிடப்படும் தானியங்களை அரசு அதிக விலைக்கு பெற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு லாபத்தை வழங்கி வந்தது. அவரது ஆட்சியில் சொட்டுநீர் பாசன திட்டத்தின்கீழ் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டது. பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தரமான விதை தானியங்கள் தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் தரமான உரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது உள்ள முதல்வர் ஜெகன்மோகன்  ஆட்சியில் விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதில்லை. தரமான விதை தானியங்கள் வழங்கவில்லை.

அமராவதியில் தலைமை செயலகத்திற்கு விவசாயிகள் விவசாய நிலங்களை வழங்கினர். ஆனால், ஜெகன்மோகன் தலைமை செயலகத்தை 3 பகுதிகளில் அமைப்பதாக அறிவித்தார். இதனால், அமராவதியில் உள்ள விவசாயிகள் தலைமை செயலகத்தை அமராவதியிலேயே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டிகடந்த 3 வருடத்தில் 156 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். முதல்வர் ஜெகன்மோகன் அனைத்து துறைகளிலும் பல்வேறு ஊழல்கள் செய்து வருகிறார்.

விவசாய துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வருகிறார். இனியாவது விவசாயிகள் விழித்துக் கொண்டு ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக போராட வேண்டும்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு 5 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் செய்தார். தற்போதுள்ள முதல்வர் ஜெகன்மோகன் 3 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் செய்துள்ளார். மொத்தம் தற்போது 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலம் கடனில் உள்ளது. வருகிற தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி வெற்றி பெற்றால் மாநிலத்தை பாலைவனம் ஆகிவிடுவார்.

இவ்வாறு, அவர் பேசினார்.இதில், தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் நானி, விவசாய சங்க மாவட்ட தலைவர் நாகேஸ்வரராவ், எம்எல்சி துரைபாபு, முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, ரூரல் மண்டல தலைவர் மோகன்ராஜ், துணை தலைவர் மேஷாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: