திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதி அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தீமித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மோவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரவுபதி அம்மன் ஆலயத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 3ம் தேதி அக்கினி மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் 4ம் தேதி பக்காசூரன் திருவிழா மற்றும் 5ம் தேதி திரவுபதை திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 6ம் தேதி சுபத்திரை திருமணம் நடைபெற்றது. 7ம் தேதி கரக உற்சவம், 8ம் தேதி அர்ஜூனன் தபசு இரவு நாடகம், 9ம் தேதி தர்மராஜா எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து 10ம் தேதி அர்ஜூனன் மாடு மடக்குதல் நிகழ்ச்சி, 11ம் தேதி படுகளமும் நடைபெற்றது.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் அக்கினி உற்சவம் எனப்படும் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த தீமிதி திருவிழாவில் மோவூர், நெய்வேலி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு திரவுபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.

11 நாட்கள் நடைபெற்ற அக்கினி மஹோற்சவ விழா ஏற்பாடுகளை மோவூர் கிராம பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பேட்டை கிராமத்தில் ஸ்ரீலக்ஷ்மி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதில் 160 பக்தர்கள் 10 நாட்களாக காப்பு கட்டி விரதம் இருந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை ஏரிக்கரையில் புனித நீராடி 7 ஊர் எல்லையை சுற்றிவந்து பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெத்தநாயக்கன்பேட்டை கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: