திருச்செங்கோடு பகுதியில் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க நடவடிக்கை: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்

நாமக்கல்: திருச்செங்கோடு பகுதியில் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 65வது ஆண்டாக கண்ணகி விழா ஈஸ்வரன் எம்எல்ஏ தலைமையில் நேற்று நடைபெற்றது.  நாமக்கல் சின்ராஜ் எம்பி முன்னிலை வகித்தார். விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக முதல்வர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றை, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் முத்தமிழறிஞர் வழியில் நினைவு அரங்கங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடி வரும் வேளையில், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறது. இந்த ஆண்டு முதல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வ.உ.சிதம்பரனார் தியாகத்தை போற்றும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்று விவரங்கள், புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு பேருந்தில் கண்காட்சி அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வந்தது.

இந்த கண்காட்சியை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மொழிப்போர் காவலர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்களின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சியும் அமைக்கப்பட்டு, கடந்த கால வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட திருச்செங்கோடு பகுதியில், கண்ணகிக்கு கோட்டம் அமைக்க முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: