ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் மண் மூடிய கால்வாய்களால் கடைகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம்-கனமழைக்கு முன்பு தூர்வார கோரிக்கை

ஊட்டி :  ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கால்வாய்கள் மூடியுள்ளதால் மழை சமயங்களில் கடைகள் நீரில் மிதக்கும் சூழல் நிலவுகிறது.

நீலகிரி  மாவட்டம் ஊட்டி ஏடிசி., மணிகூண்டு பகுதியில் நகராட்சி மார்க்கெட் வளாகம்  உள்ளது. இந்த வளாகத்திற்குள்ளும், வெளிப்புறத்திலும் சுமார் 1300க்கும்  மேற்பட்ட கடைகள் உள்ளன. புத்தக கடைகள், உரம், மளிகை, காய்கறி, இறைச்சி,  துணி உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் உள்ளன. இதனால், பொருட்கள் வாங்க  ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட  இந்த மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் பழுதடைந்தும், மண்  மூடியும், சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் காணப்படுகிறது. இதன்  காரணமாக, அதீக கனமழை கொட்டி தீர்க்கும் சமயங்களில் மழைநீர் செல்ல வழியின்றி  மார்க்கெட் வளாகத்திற்குள் தேங்கி விடுகிறது.

குறிப்பாக, கழிவுநீருடன்  கலந்து தேங்கி விடுவதால் கடைகள் நீரில் மிதக்கும் சூழல் ஏற்படுகிறது.

கழிவுநீருடன்  மழைநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகள் மட்டுமின்றி  பொதுமக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.  மழைநீர் தேங்காத வண்ணம் மார்க்கெட் வளாகத்தில் கழிவுநீர் கால்வாய்களை  சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி  வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே,  இம்முறை சிறப்பு கவனம் செலுத்தி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கால்வாய்களை  தூர்வாறிட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கால்வாய்கள், நடைபாதை  ஆகியவற்றை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: