நாகை அருகே வறண்ட நிலப்பரப்பில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து அரசு அலுவலர் சாதனை

நாகை : நாகை அருகே வறண்ட நிலப்பரப்பில் தோட்டக்கலை பயிற்களை சாகுபடி செய்து அரசு அலுவலர் சாதனை படைத்துள்ளார்.நாகை அருகே வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் நாகையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அரசு ஊழியரான மணிமாறன் அலுவல் பணி முடித்தவுடன் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களை ஒரு ஏக்கரில் விதைத்து சாதனை படைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் போடப்பட்ட ஊரடங்கை வீணாக கழிக்க மனம் இல்லாமல் மணிமாறன் தனக்கு சொந்தமான நிலத்தில் வெள்ளரிக்காய், தர்பூசணி, கத்தரிக்காய், பீக்கங்காய், கொத்தவரங்காய் போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டார்.

கொரோனா காலத்தில் சிறிய அளவில் கிடைத்த வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட காய்கள் மற்றும் பழங்களை நண்பர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த பயிர்கள் நல்ல விளைச்சல் தருவதால் மலிவான விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இது குறித்து மணிமாறன் கூறியதாவது:

கடந்த 2004ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் சுனாமி பாதிப்பால் எங்கள் பகுதியில் நல்ல நீராக இருந்தது உப்பு நீராக மாறியது. அதன் பின்னர் வறண்ட நிலப்பரப்பாக மாறியது. ஒரு அடிக்கு ஆழம் தோண்டி விதைகளை தெளித்தேன். ரசாயன உரங்கள் எதுவும் இல்லாமல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் சாணங்களை மட்டுமே இயற்கை உரங்களாக பயன்படுத்தினேன்.

தண்ணீர் இல்லாத காரணத்தால் அதிக அளவு தண்ணீர் பாய்ச்சாமல் அவ்வப்பொழுது தண்ணீரை பாய்ச்சாமலும் கூலி ஆட்கள் இல்லாமலும் குடும்பமாக இருந்து விவசாய பணிகளை மேற்கொண்டோம்.

இதன் பயனாக வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட காய்கறிகள் அதிக விளைச்சல் தந்தது. இயற்கை உரங்களை மட்டுமே முழுவதும் பயன்படுத்துவதால், உரச்செலவு இல்லை. ஓய்வு மற்றும் விடுமுறை நாட்களை இவ்வாறு பயனுள்ளதாக்கி தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வெற்றி கண்டுள்ளதாக கூறினார்.

Related Stories: