திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் விண்ணப்பித்த 11 பேருக்கு உடனடி பட்டா

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக இதற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் நகரம், பேரத்தூர், விஷ்ணுவாக்கம், கரிகாலவாக்கம், அரும்பாக்கம், வெள்ளியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக மனுக்களை அளித்தனர். கடந்த 3 தினங்களில் 640 மனுக்கள் வரப்பெற்றதாக வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்து உடனுக்குடன் நிலப்பட்டா, வீட்டு மனைப்பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் உள்ளிட்டவைகளை வழங்கினர். ஒரே நாளில் 2 மணி நேரத்ததில் 11 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. விண்ணப்பித்த அரைமணி நேரத்தில் பட்டா வழங்கியதால் மகிழ்ச்சி அடைந்த பயனாளிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர்கள் பாண்டியராஜன், செல்வம், துணை வட்டாட்சியர்கள் ஜெயஸ்ரீசுந்தர், அருணா, சரஸ்வதி, சுகன்யா, வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் தினேஷ்குமார், தலைமை நில அளவையர் செந்தில், கிராம நிர்வாக அதிகாரிகள் பிரீத்தி, சூர்யா, முனிரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: