பாளை. நூற்றாண்டு மண்டபத்தில் 2வது நாளாக தினகரன் கல்வி கண்காட்சியை பார்வையிட குவிந்த மாணவ, மாணவிகள்

நெல்லை: நெல்லையில் தினகரன் நாளிதழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி  இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. மாணவிகளின்  உயர்கல்விக்கு  வழிகாட்டும் வகையில் தலைசிறந்த  கல்வியாளர்களின் ஆலோசனைகள் இடம் பெறுகிறது. மாலையில் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் பரிசு வழங்கி பேசுகிறார். இந்தியாவின் முன்னணி  தமிழ்  நாளிதழ் தினகரன், பத்திரிகை பணியோடு கல்விப் பணியிலும் ஈடுபட்டு  வருகிறது.  மாணவ- மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில்  நெல்லையில் 11வது  ஆண்டாக தினகரன் நாளிதழ் நடத்தும் மாபெரும் கல்வி  கண்காட்சி, பாளை.  நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று (11ம் தேதி) காலை 10 மணிக்கு நெல்லை அரசு இசைப்பள்ளி மாணவ,  மாணவிகளின்  மங்கள இசையுடன் துவங்கியது.

கண்காட்சியை  நெல்லை  கலெக்டர் விஷ்ணு, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பேசினார். நெல்லை அரசு பொறியியல்   கல்லூரி துணை முதல்வர் சித்தார்த்தன் குத்துவிளக்கேற்றினார். நெல்லை ஸ்காட் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிளிட்டஸ் பாபு, வாசுதேவநல்லூர்  தங்கப்பழம் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவ இயக்குநர் ஆர்சி வர்மா, ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகம்மது ஷாபி ஆகியோர் பேசினர். ஷிபா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் முகம்மது அராபத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நெல்லை தினகரன் செய்தி ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். தலைமை நிருபர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். நேற்று துவங்கிய கல்வி  கண்காட்சியை காண நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவிகள் அலை, அலையாய் குவிந்தனர்.

பிளஸ்2 வகுப்பிற்கு பிறகு எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம், உயர் கல்வி வாய்ப்புகள் என்ன, எந்த படிப்புகள் எந்த கல்லூரிகளில் உள்ளது. வேலைவாய்ப்பு நிறைந்த படிப்புகள் எவை, மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி, பொறியியல் படிப்பில் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம். துணை மருத்துவ படிப்புகள்  என்னென்ன? என மாணவ, மாணவிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு அரங்க அமைப்பாளர்கள் பொறுமையாக பதில் அளித்தனர். அரங்கத்தில் மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வியாளர்கள் பதில் தெரிவித்தனர். கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட  கல்வி நிறுவனங்களின்  அரங்குகள் இடம்பெற்றன. கண்காட்சியின் நிறைவு நாளான இன்று (12ம் தேதி) காலை 10 மணிக்கு சுடச்சுட கேள்விகள் கேட்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

காலை 11 மணிக்கு வள்ளியூர் கெய்ன்ஸ் கல்வி நிறுவனங்கள் நடத்தும் மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி நடந்தது. நண்பகல் 12 மணிக்கு பாளை. சதக்கத்துல்லா கல்லூரி பேராசிரியர் சவுந்தர மகாதேவன் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். மாலை 4  மணிக்கு விழா அரங்கில் சுடச்சுட கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் கலந்து கொண்டு அதிக கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவிக்கு பரிசுகள் வழங்கி நிறைவுரையாற்றுகிறார். நெல்லை தினகரன் பொதுமேலாளர் செல்வராஜ் நன்றி கூறுகிறார். கல்வி  கண்காட்சியை  தினகரனுடன் நெல்லை ஸ்காட் கல்வி நிறுவனங்கள் மற்றும்  வாசுதேவநல்லூர்  தங்கப்பழம் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறது.

Related Stories: