ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல்; ஜூன் 15ல் வேட்புமனு தாக்கல்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு..!!

டெல்லி: இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாநிலங்களவை தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். நாடு முழுவதும் 776 எம்.பி.க்கள், 4,033 எம்.எல்.ஏக்கள் என 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். 776 எம்.பிக்களின் ஓட்டு மதிப்பு 5,43,700, மொத்த எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பு 5,43,231. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும்.

வேட்புமனு ஏற்கப்பட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்.எல்.ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 15ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை ஜூலை 2ம் தேதி வரை திரும்ப பெறலாம். தேர்தல் நடைபெற்றால் ஜூலை 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி விவரங்கள் பின்வருமாறு:

* மனுதாக்கல் ஆரம்பம்: ஜூன் 15

* மனுதாக்கல் முடிவு: ஜூன் 29

* வேட்புமனு பரிசீலனை: ஜூன் 30

* வேட்பு மனு திரும்பப்பெற: ஜூலை 2

* தேர்தல் வாக்குப்பதிவு: ஜூலை 18

* வாக்கு எண்ணிக்கை: ஜூலை 21

* புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு: ஜூலை 25

Related Stories: