வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஹெல்மெட் அணியாமல் வந்த 200 பேருக்கு அபராதம்-எஸ்பி திடீர் ஆய்வு

வேலூர் :  வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஹெல்மெட் அணியாமல் வந்த 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எஸ்பி திடீரென ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தியதில், பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 50 சதவீத வாகன ஓட்டிகள் கூட இதை கடைபிடிப்பது இல்லை. அப்படியே, ஹெல்மெட் வைத்திருந்தாலும் தலையில் அணிவது இல்லை.

வேலூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் சுமார் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எஸ்பி ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே எஸ்பி ராஜேஷ்கண்ணன் நேற்று  திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது ஹெல்மெட் இன்றி வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு அபராதம் விதித்தார். ஹெல்மெட் இன்றி அவ்வழியாக வந்த எஸ்ஐ மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்தவருக்கும் எஸ்பி அபராதம் விதித்தார். அதன்படி கலெக்டர் அலுவலகம் அருகே ஹெல்மெட் அணியாமல் வந்த 200க்கும் மேற்பட்டோருக்கு தலா ₹100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஹெல்மெட் சோதனை நடைபெறுவதை பார்த்து, கலெக்டர் அலுவலகம் வழியாக வந்தவர்கள் திடீரென வாகனத்தை திருப்பி சென்றனர்.  வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும், ஹெல்மெட் அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்பி எச்சரித்தார்.

அப்போது, டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் கருணாகரன் உடனிருந்தனர்.  இதுகுறித்து எஸ்பி ராஜேஷ்கண்ணனிடம் கேட்டபோது, ‘வேலூர் மாவட்டத்தில் பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போது நடத்திய திடீர் ஆய்வில் ஹெல்மெட் அணியாமல் சென்ற எஸ்ஐக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த எஸ்ஐ குறித்து டிஎஸ்பியிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

போலி பிரஸ் ஸ்டிக்கர் அழிப்பு

வேலூரில் பைக்கில் செல்பவர்கள் பலரும் போலியாக பிரஸ், போலீஸ், வக்கீல் என ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஹெல்மெட் குறித்து சோதனை நடத்தியபோது, பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி பைக்கில் வந்த வாலிபரை மடக்கிய போலீசார், எந்த பிரஸ் என கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த வாலிபர் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, போலீசார் பைக்கில் ஒட்டிய பிரஸ் ஸ்டிக்கரை அழிக்க வைத்தனர். மேலும் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

Related Stories: