பெரணமல்லூரில் குப்பையை எரித்தபோது சாலையில் சென்றவர்களை விரட்டி கொட்டிய தேனீக்கள்-பெண் உட்பட 8 பேருக்கு சிகிச்சை

பெரணமல்லூர் : பெரணமல்லூரில் தேன் கூட்டின் அருகே குப்பையை எரித்தபோது, புகை கிளம்பியதால் சாலையில் சென்றவர்களை தேனீக்கள் விரட்டி கொட்டியது. இதில் பெண் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பேரூராட்சி சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள மேல் நீர்த்தேக்க தொட்டியின் அடியில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மேல் நீர்த்தேக்க தொட்டி அருகில் இருந்த குப்பையினை அப்பகுதியில் உள்ள நபர் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதிலிருந்து கிளம்பிய புகை தேன் கூட்டில் பட்டதால், தேனீக்கள் கூட்டில் இருந்து கலைந்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை கொட்டியது.

இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் அலறி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் பலரை தேனீக்கள் விரட்டி கொட்டியது. தேனீக்கள் கொட்டியதில் அதிகளவில் பாதிப்படைந்த ராமச்சந்திரன், சதீஷ் ஆகிய 2 பேர்  செய்யாறு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பெண் உட்பட 6 பேர் பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரணை நடத்தினர். சாலையில் சென்றவர்களை தேனீக்கள் விரட்டி கொட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: