தமிழகத்தில் டெண்டர்கள் முறைப்படிதான் நடக்கும்: பாஜ தலைவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: ஆவின் உள்பட எந்த அரசு துறையாக இருந்தாலும் தமிழகத்தில் டெண்டர்கள் அனைத்தும் முறைப்படி தான் நடக்கும். இதில் சமரசம் எதுவும் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருகட்டமாக, 9 நாள் புத்தக கண்காட்சியை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட அரங்குகளில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக ஒமிக்ரான் பிஏ 4,பிஏ 5, வகை தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 150 மாதிரிகள் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவில், தமிழகத்தில் புதிதாக ஒமிக்ரான் பி.ஏ. 4, 4 பேருக்கும், பி.ஏ. 5,  8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 12 பேரும் தொடர் கண்காணிப்பில் நலமாக  உள்ளனர். நியூட்ரிஷன் கிட் டெண்டர் குறித்து, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை. டெண்டர் விடாத நிலையில், அதில்ரூ.48 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். பைனான்ஷியல் பிட் இதுவரை ஓப்பன் செய்யப்படவில்லை. அதற்குள், அதில் முறைகேடு என்பது எந்த வகையில் நியாயம். இதை அவர் நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்.  நியூட்ரிஷன் கிட் டெண்டர் குறித்து ஆவினில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இரும்பு சத்துகள் ஆவினில் கிடையாது. அதனை வெளியில்தான் வாங்க வேண்டும். அரசு துறையே இருந்தாலும், டெண்டர் முறைப்படிதான் நடக்கும் என்றார்.

Related Stories: