வால்பாறையில் முள்ளம்பன்றியுடன் சண்டையிட்டு காயத்துடன் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி: மரத்தில் பரண் அமைத்து கண்காணிப்பு

வால்பாறை: வால்பாறையில் முள்ளம்பன்றியுடன் சண்டையிட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட 2 வயது ஆண் புலிக்குட்டி வேட்டை பயிற்சி அளிப்பதற்காக விடுவிக்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயது ஆண் புலிக்குட்டி படுகாயங்களுடன் உடல் மெலிந்து நடமாடி வந்தது. வனத்துறையினர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த புலிக்குட்டியை பிடித்தனர். அது முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்றதும், அந்த மோதலில் புலிக்குட்டியின் உடலிலும், வயிற்றிலும் முட்கள் குத்தி காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் புலிக்குட்டியின் உடலில் இருந்த முள்ளம்பன்றியின் முட்களை அகற்றி காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். பிடிபட்டபோது புலிக்குட்டி வெறும் 48 கிலோ எடை மட்டுமே இருந்தது. தொடர் சிகிச்சை மற்றும் இரையால் தற்போது 144 கிலோ எடையுடன் முழு உடல் நலத்துடன் கம்பீரமாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்  வனத்துறை தலைமை வன பாதுகாவலர் புலிக்குட்டியை பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அதனை வனத்தில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.

புலிக்குட்டிக்கு உணவளித்து வேட்டை பயிற்சியின்போது கண்காணிக்க, ரூ.75 லட்சம் செலவில் பிரமாண்ட கூண்டு  அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மானாம்பள்ளி பீட்டில் அடர் வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள அந்த பெரிய கூண்டிற்கு புலி கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது. அதனை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு கேமரா, 2 அடுக்கு கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்வேலி பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

சிறிய கூண்டில் இருந்து பிரமாண்ட கூண்டிற்குள் மாற்றப்பட்ட புலிக்குட்டி அந்த கூண்டில் ராஜ நடை நடந்து பயிற்சி பெற்றது. அதனை 24 மணி நேரமும் கண்காணிக்க மரத்தில் பரண் வீடு அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வனத்துறையினர் கண்காணிக்கின்றனர். யானைகள் புகாமல் இருக்க அகழியும் வெட்டப்பட்டு புலிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. புலிக்குட்டி வேட்டையாட முழு அளவில் பயிற்சி பெற்றதும் வனத்தில் விடப்படும்.

Related Stories: