இலங்கையில் ஏற்கனவே போடப்பட்ட துறைமுக விரிவாக்க திட்டம்; கொழும்பு வந்தது சீனாவின் நீர்மூழ்கி கப்பல்.! நெருக்கடியான நிலையில் ஆதிக்கம் செலுத்த திட்டம்

கொழும்பு: இலங்கையில் ஏற்கனவே போடப்பட்ட துறைமுக விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக, சீனாவின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு வந்துள்ளது. நெருக்கடியான இந்த நிலையில் சீனா இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள ெபாருளாதார நெருக்கடியால், அந்நிய செலாவணி, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகள் அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமின்றி நிதி உதவியையும் செய்து வருகின்றன. அந்த வகையில், சீனாவில் இருந்து அவசரகால மருந்து பொருட்கள் நேற்று இலங்கையின் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இலங்கைக்கான சீனத் தூதர் நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டார். இதுகுறித்து இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள அறிக்கையில், ‘மனிதாபிமான உதவிகளை வழங்கிய சீனாவுக்கு பாராட்டுகள். சவாலான நேரத்தில் இலங்கைக்கு உதவிய சீன அரசுக்கு, இலங்கை மக்கள் எப்போதும் ஆதரவாக இருப்பர்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘80,000 டன் எடையுள்ள MV XIN YAO HUA என்ற நீர்மூழ்கிக் கப்பல், மூன்று கப்பல்களுடன் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுள்ளது. இந்த கப்பல்கள் இலங்கையின் பொருளாதார மீட்புக்காகவும், ஜெயா கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு கொள்கலன் முனையம் உட்பட  துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஆதரவாகவும் இந்த கப்பல்கள் செயல்படும். JUN HAI 1  என்ற கப்பல் அகழ்வாராய்ச்சி கப்பலுடன் இணைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கையில் சீனாவே மிக அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இதனால் உள்நாட்டிலும் சர்வ தேச அளவிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள், இலங்கையின் துறைமுக விரிவாக்க திட்டத்திற்காக வந்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்க திட்டம் தொடர்பாக இலங்கை அரசுக்கும் சீன அரசு நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இலங்கையில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா தொடர்ந்து முயற்சி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: